Saturday, February 28, 2009

அலைஸ் கால்ட்ரோன் - உலக அமைதிக்காக உழைத்த இந்து

அலைஸ் கால்ட்ரோன் - உலக அமைதிக்காக உழைத்த இந்து
~ அரவிந்தன் நீலகண்டன் மே 6th, 2008 பார்வை: 358 அச்சிட
ஜாஸ் இசை மேதையான ஜான் கால்ட்ரோனின் மனைவியான அலைஸ் கால்ட்ரோன் யாழினை ஒத்த ஹார்ப் எனும் இசைக்கருவியை இசைப்பதில் மேதமை உடையவராக விளங்கினார். ஹார்ப் இசைக்கும் பெண் இசைக் கலைஞர்கள் அரிதானவர்களே. கோல்ட்ரோனின் இசைக்குழுவில் அவர் விரைவில் பிரதான ஹார்ப் கலைஞரானார். இசையில் மேலும் மேலும் மூழ்கிய அவர் விரைவில் பியானோ ஆர்கன் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றார் அத்துடன் இந்து இசை கருவிகளான சிதார் தம்பூர் ஆகியவற்றிலும் மேதமை பெற்றார்.
1970களில் இந்து ஆன்மிகத்தினால் ஈர்க்கப்பட்ட அவர் சுவாமி சத்சித்தானந்தாவிடம் மாணவரானார். பின்னர் தீட்சை பெற்று தன்னை முறைப்படி இந்துவாக்கி சனாதன தர்ம பாரம்பரியப்படி துரியசங்கீதானந்தா என பெயரினை மாற்றிக்கொண்டார். துரியா என அழைக்கப்பட்டார். பகவான் சத்திய சாய் பாபாவின் பக்தையாகவும் இவர் பல அழகிய ஆன்மிக பாடல்களை இசையமைத்துள்ளார்.
துரியா, Pramahansa Lake, ஜெய ஜெய ராமா (1969), துரியாவும் ராமகிருஷ்ணரும். சச்சிதானந்தத்தில் ஒரு யாத்திரை, சிவலோகா, ஐஸிஸும் ஓஸிரிஸும்,(1970) பிரபஞ்ச பிரக்ஞை (Universal Consciousness), ஹரே கிருஷ்ணா, சீதாராமா, ‘அமென் ராவின் அங்க்’ (1972)ராதாகிருஷ்ண நாம சங்கீர்த்தனம் (1976) ஆகியவை அவரது ஆன்மிக இசைவெளியீடுகளில் சில. இவர் இசையினை ஒரு பகவத் பிரசாதமாக காண்கிறார். அவரது பார்வையில் இசை ஒரு வழிபாடும் ஆகும். அது சாந்தத்தையும் ஆறுதலையும் குணப்படுத்துதலையும் அளிக்கும் இறை வரமாகும் என அவர் கருதுகிறார். அஸதோ மா ஸத்கமய தமஸோமா ஜோதிர் கமய ம்ருத்யோமா அமிர்தம் கமய எனும் உபநிடத மந்திரமே உலக வாழ்க்கையின் இருப்பினை சத்தியத்துடன் தொடர்பு படுத்துவதாக அவர் உணர்கிறார்.
1975 இல் கலிபோர்னியாவின் வேதாந்த மையத்தினை அவர் நிறுவி சனாதன தர்மத்தின் ஒளியினால் அமெரிக்க மக்களின் வாழ்க்கைக்கு வளமும் அமைதியும் அளித்து தொண்டு புரிந்தார். 2004 இல் தனது மகனும் ஸாக்ஸபோன் கலைஞருமான ரவி கால்ட்ரோனுடன் இணைந்து Translinear light எனும் இசைத்தொகுப்பை வெளியிட்டார். சீதாராமா, ஜகதீஸ்வரா, சத்திய சாயி ஈசா ஆகிய பாடல்கள் அத்தொகுப்பில் உள்ளன. ஜனவரி 12 2007 அன்று அவர் சமாதியடைந்தார். அமெரிக்க இசை கலைஞரும் சனாதன தருமத்தின் ஆன்மிக இசை பாரம்பரியத்தின் மூலமும் நாடு, இன மத பேதமின்றி உலக அமைதிக்காக உழைத்தவருமான இந்த பெண் கலைஞரினை உலக நன்மைக்கு உழைத்த இந்துக்கள் வரிசையில் தன் வாசகர்களுக்கு அறிமுகப் படுத்துவதில் தமிழ்இந்து.காம் பெருமை அடைகிறது.
அலைஸ் கோல்ட்ரானின் வலைத்தளம் : http://www.alicecoltrane.org/
இந்த தகவல் அனைத்தும் தமிழிந்து.காம் எனும் இணையத்தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது,அவர்களுக்கு என் நன்றி

No comments:

Post a Comment